Tuesday, March 23, 2010

ஜில்லுன்னு ஒரு நிலாப் பயணம்!
















பயணத்திற்கு முன் சில பயனுள்ள அறிவிப்பு:

-நிலவில் காற்று ; நீர் கிடையாது. ஆக, நிலவில் (காற்று இல்லாத இடத்தில்) மனிதனுக்குக் காது கேட்காது.

-பூமியின் நிழல், நிலவின் மீது படுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

-சூரிய குடும்பத்தில் தற்பொழுது 8 கோள்கள் தான் இருக்கின்றன. புளுட்டோவை கோள் வரிசையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.

-ஒரு பொருளின் எடை 1/6 தான் நிலவில் இருக்கும். அதாவது, பூமியில் 60 கிலோ, நிலவில் 10 கிலோ தான்.


பயணியுங்கள் இப்போது:


முந்தாநாள் வரை முழுக்கறுப்பு - அமாவாசையாய்!
பதினைந்தே நாளில் பளபளப்பு - பவுர்ணமியாய்!
நிலவே,
என்ன முகப்பசை உபயோகிக்கிறாய்?

எந்த முட்டாள் பயல்,
மொத்த மாவையும் ஒன்றாய் சேர்த்து, ஓரேஒரு லட்டு செய்து
அதையும் எல்லோருக்கும் எட்டாத தூரத்தில் தூக்கி எறிந்தவன்?

நிலவே,சொல்வதைக் கேள்!
எத்தனை முறை உலகத்தைச் சுற்றினாலும் உனக்குக் கிடைக்காது.
யானைமுகன் அந்த ஞானப்பழத்தை எப்போதோ சாப்பிட்டுவிட்டான்!

நாங்கள் உன்மேல் காலடி வைத்ததும் கத்தினாயா?
மன்னித்து விடு!
காற்றில்லா இடத்தில் மனிதனுக்கு காது கேட்காது!

உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?
உன்னுடம்பை தானே நின்று நிதானமாய் தன் நிழல் வாயின் மூலம்
தின்று தீர்க்கிறது இந்த திமிர் பிடித்த பூமி!
பிறகு ஏன் இதையே சுற்றிச்சுற்றி வருகிறாய்?

என்னது?
மனிதன் ஏதாவது தருவான் என்றா
உடல் தேய்ந்தாலும் பரவாயில்லை என்று
உலகத்தைச் சுற்றுகிறாய்?

அடப்பாவமே!
இவன் எச்சில் கையால் கூட காக்காய் விரட்டமாட்டான்!
உன்னிடம் வந்த பின்பும், அள்ளாமல் இருக்கிறானே!
அதற்கு ஆனந்தப் படு!

குருதி பாயும் இதயம் இருந்தும் இங்கே அரக்க குணம்!
ஈரமே இல்லாத உனக்கு எப்படித் தான் இவ்வளவு இரக்க குணமோ?
மனிதன் உதவி கேட்காமலேயே, ஒளி கொடுக்கிறாயே!



 
ஆம். நீ சொல்வது சரி தான்!
குடிகாரன் தான் அந்தக் கதிரவன்!
சாயங்காலம் ஆனால் போதும்,
சாராயம் குடித்துவிட்டு எங்கு போய் சாய்கிறானோ?
ஏதோ, நீ கொடுக்கும் வெளிச்சத்தில் தான்
பூமி பாதை மாறாமல் பயணிக்கிறதோ?

சரி, இரவில் உன் வீட்டில் தங்குகிறான் சூரியன் என்கிறாய்.
பகலில் எங்கு போய்கிறான் தெரியுமா, உன் ஏகபத்தினி விரதன்?
உன் சகக்கழுத்தி* பூமியோடு சந்தோஷமாய் இருக்கிறான்.

பொறு!
நீ கோபப்படுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.
உன்னைச் சேர்க்காமல், எங்களுக்குத் தெரிந்தே அவனுக்கு எட்டு மனைவிகள்!
இதை மானிடன் நான் ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும் என்கிறாயா?
அடுத்தவனைப் போட்டுக் கொடுப்பதில் எங்களுக்கு அலாதி சுகம்!

'உடற்பயிற்சி செய்யாமலேயே உடல்எடை குறைக்கலாம் வாருங்கள்'
என்று விளம்பரம் கொடுத்து எங்களை வலைக்கப் பார்க்கிறாயா?
முதலில் நீராலும், காற்றாலும் உன்னை நிரப்பு!
பிறகு பார்!
கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு வந்து கும்மாளம் அடிக்கிறோம்!

----------------------------------------

*சகக்கழுத்தி - சக்காளத்தி (நடைமுறைத் தமிழில்), ஒன்றிற்கு மேற்பட்ட தாரங்கள் (உரைநடை தமிழில்)

No comments:

Post a Comment