Sunday, April 18, 2010

நான் மிதவாதியா?














உன்னைக் குத்திய முள்ளை
கொதி எண்ணையில் தள்ளி
கருட புராணத்தின் படி கவனித்தேன்!


நீ வாங்கியும் அழுகிய வாழப் பழத்தை
தோலுரித்து வேலியில் தொங்க விட்டேன்!

உன்னை இடறிய நாற்காலியை
நான் காளியாகி முக்காலி ஆக்கினேன்!


உன் கை கீறிய கத்தியை
துருப் பிடிக்க வைத்து உருக்குலைத்தேன்!


வெட்டிப் போட்ட உன் பிறை நிலா நகத்தை
வலி வர உன்னை ஒருமுறை சுரண்டியதற்காய்
அனலில் கருக்கி அமாவாசை ஆக்கினேன்!


உன்னை தலையில் இடித்த மரக்கிளையை
மரங்கொத்தி கொண்டு குடையச் செய்தேன்!


கருணையே இல்லாமல் உன் நாக்கைச் சுட்ட வெந்நீரை
கவலையே இல்லாமல் குளிர்ப் பெட்டியில் நாள் கணக்கில் உறயவிட்டேன்!


உன் கூந்தலில் வைத்தும் வதங்கிய மலர்களை
புத்தகத்தில் வைத்து'பாடம்' செய்து பாடம் புகட்டினேன்!


உன் தேகம் நனைத்த மழையை
கொதிக்க வைத்து குளிர்ந்தேன்!


உன் கால் கடித்த காலணியை
சேற்றில் நடந்து கால்(1/4) அணி (அழகு)யாக்கினேன்!


விளம்பரமே இல்லாமல் இப்படிப் பல
கலவரங்களைச் செய்கிறேன்!

என்னைப் போய் மிதவாதி என்கிறாயே?

No comments:

Post a Comment