Sunday, December 9, 2012

என்னில் பிரதிபளித்த மணி ரத்னத்தின் 'கடல்' பாடல்!

ஒரு வாரத்துக்கு முன்னாடி அவன பாக்குறா. பாத்ததுலேருந்து அவ அவளா இல்லை. அவங்கிட்டே போயி எதுவும் சொல்ல முடியல. இப்ப அவ இருக்குற நெலமக்கு ஏற்ப ஒரு பாட்டு எழுதணும்.

கண்டிப்பாக இது தான் 'கடல்' படத்தின் 'நெஞ்சுகுள்ள" பாடலுக்கான சூழ்நிலை.


மருதமும் நெய்தலும் கலந்து இருக்கின்ற டெல்டா பகுதியைச் சார்ந்த தஞ்சை மாவட்ட படிக்காத பெண்ணொருத்தி, அவன் அப்படி ஒன்றும் அழகில்லை. அவனை விட எவ்வளவோ பேர் இருக்கும் போதும் அவனிடம் ஈர்க்கப்படுகிறாள்.

குறிப்பு:
வைரமுத்து அவர்களின் சாயல் கூட என் கவிதையில் இருக்கக் கூடாது என்பதால் கவனமாக எழுதுயுள்ளேன்.


தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!

சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)

விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!

அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கருவண்டு உன்ன கண்டு குறஞ்சுருச்சே!

உச்சி வெயில் நெழலு போல
உள் இறங்கி வந்த நீக
சாய்ங்கால நெழலு போல
உடம்பெல்லாம் நீளூரியே!

சூறாவளி சுத்துகிற
சுறா விழி ரெண்டு வச்சு
சத்தமில்லா யுத்தத்தை
நெஞ்சுகுள்ள நடத்துறியே!

அண போட்டு அடைச்சாலும்
கடல் நோக்கி ஓடிவரும்
காட்டாத்து நதி போல
கதறுதடா எங் மனசு!

காதால நீ கேக்க
இதய சத்தம் ஏத்தி வச்சேன்!
கண்ணால நீ பாக்க
கவிதையா என்ன மாத்தி வச்சேன்!
தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!

சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)

விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!

அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கரு வண்டு உன்ன கண்டு குறஞ்சுருச்சே!

தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்.....

தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

உச்சி வெயில் நெழலு போல
உள் இறங்கி வந்த நீக
சாய்ங்கால நெழலு போல
உடம்பெல்லாம் நீளூரியே!

சூறாவளி சுத்துகிற
சுறா விழி ரெண்டு வச்சு
சத்தமில்லா யுத்தத்தை
நெஞ்சுகுள்ள நடத்துறியே!

தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்.....
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

அண போட்டு அடைச்சாலும்
கடல் நோக்கி ஓடிவரும்
காட்டாத்து நதி போல
கதறுதடா எங் மனசு!

காதால நீ கேக்க
இதய சத்தம் ஏத்தி வச்சேன்!
கண்ணால நீ பாக்க
கவிதையா என்ன மாத்தி வச்சேன்!

தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

புயல் காத்தடுச்சும் கூட வளஞ்சதில்லே!
பூங்காத்தான உனக்கு அசையிறேன் தன்னாலே!

சிரிக்கிற பல்லால உரிக்கிற சொலயோட! (சுலை)
வெறிக்கிற விழியால பறிக்கிற கொலயோட! (குலை)

விராலு மீனு ஓடயிலே ஒறஞ்சிருக்கும் ஓர் குருவி
உழுவ மீனு உன்ன கண்டு கரஞ்சுருச்சே!

அப்பங் ஆத்தா போதுமுன்னு நெறஞ்சுருந்த ஓர் பிறவி
கரு வண்டு உன்ன கண்டு குறஞ்சுருச்சே!


தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
தஞ்சாவூரு சம்பா நாத்தாருக்கேன்
உங்க வயலில் என்னை நடவு செய்ய காத்திருக்கேன்

ஒளி ஒலி வடிவத்தில்....

Friday, May 27, 2011

சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா?


செய்தி:-

பள்ளிக் கல்வியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாநிலக் கல்வி திட்டம் (ஸ்டேட் போர்டு), மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வித் திட்டங்கள், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நான்கு வகையான கல்வித் திட்டங்கள், மாணவர்களை அடிப்படையிலேயே பிரிப்பதுடன், எதிர்காலத்தில் சமூக, பொருளாதார ரீதியாகவும் அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க வழி வகுக்கிறது என்ற குற்றச்சாட்டை, கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தனர்.இதை மாற்றுவதற்கு, ஒரே வகையான, தரமான கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பரவலாக குரல் எழுப்பப்பட்டது. இதையடுத்து, 2006 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.வகுப்பு வாரியாக, நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து, பெரும் செலவில் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு, சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மீதமுள்ள வகுப்புகளுக்கு, வரும் ஜூன் மாதம் அமல்படுத்தப்பட இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.பதவியேற்ற ஏழாவது நாளில், திடீரென சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து, ஜெயலலிதா அறிவித்தார். தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் தரமானதாக இல்லை என்றும், பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, தரமான பாடத் திட்டங்களை உருவாக்க குழு அமைத்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதனால், வரும் கல்வியாண்டில் பழைய பாடத் திட்டங்களே மீண்டும் அமலுக்கு வருகின்றன.

சமச்சீர் கல்வி பற்றி என் கருத்து.

சமச்சீர் கல்வி முறை என்பது "எல்லோருக்கும் எல்லாமும் ஒன்று" என்ற சமத்துவ எண்ணத்தின் வெளிப்பாடு.12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் எந்தப் பள்ளியிலிருந்து வந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான படிப்பு சொல்லித்தரப் பட்டிருக்க வேண்டும். கல்வியில் வேறுபாடு கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடு.

சரி இதை சற்று அலசிப் பார்ப்போமானால், கல்விக்கு மட்டுமில்லை. அடிப்படை வசதிகள், மருத்துவம் எல்லாவற்றிலும் சமச்சீர் வேண்டும்.உதாரணமாக மருத்துவத்தில் சமச்சீர் என்று வைத்துக் கொண்டால், இரண்டு நிலைகள் (standard) உள்ளன. 1. அரசு மருத்துவனைகளை தனியார் மருத்துவமனைகளின் தரத்தோடு மாற்றுவது அதாவது ஏற்றுவது. 2. தனியார் மருத்துவமனைகளை அரசு மருத்துவமனைகளின் தகுதிபோடு இருக்கும்படி மாற்றுவது அதாவது குறைப்பது.

முதல் சூழ்நிலை நடைமுறைக்கு வந்தால், அனைத்து (அரசு உள்பட) மருத்துவனைகளும் அப்பலோ மருத்துவமனை போல இருக்கும். இப்படி இருந்தால் நினைத்துப் பாருங்கள். நாடே இருமாது. இரும்பு போல இருக்கும்.ஆரோக்கிய நாடு வளமான நாடு. ஆனால் இது நடைமுறை சாத்தியா? வளமான நாடுகளுக்கு மட்டுமே இது சாத்தியம்.

இரண்டாவது சூழ்நிலை நடைமுறைக்கு வந்தால், அப்பலோ முதல் அனைத்து மருத்துவமனைகளும் சமச்சீராக அரசு மருத்துவமனைகளின் தரத்திற்கு வந்தால், நமக்கே தெரியும். இது தரம் குறைகிறது என்று. பிறகு அதன் பாதிப்பைச் சொல்லவா வேண்டும்? இருமி இருமி இந்தியாவையே குலுக்க வேண்டி வரும்.

சரி.... இப்போது கல்விக்கு வருவோம். மெட்ரிக் கல்வி திட்டத்தை சமச்சீர் என்று ஆக்கிவிட்டால், கிராமப் புற மாணவர்களின் கதி என்ன? படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளின் கதி என்ன? ஆனால் அனைத்து மாணவர்களும் உயர்ந்த தரக் கல்வியைப் படிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் இது பள்ளியை விட்டு விலகும் மாணவர்களின் (drop out) எண்ணிக்கையை அதிகப் படுத்தி விடும். நன்றாகப் படிப்பவர்கள் இன்னும் நன்றாகப் படிப்பார்கள். சரியாகப் படிக்காதவர்கள் காணாமல் போய் விடுவார்கள். ஆக மெத்தப் படித்த கூட்டம் ஒரு பக்கம், எதற்கும் உதவா உதவாக்கரைகள் ஒருபக்கம் என இரு சமுதாயம் வரும்.(இப்போது, அரசு பாடத்திட்டம் படிப்பவர்களுக்கே.. கிராமப் புர மாணவர்களுக்கு என தனியான இட ஒதுக்கிடு உள்ளது என்பது கவனிக்கத் தக்கது)

இரண்டாவது சூழ்நிலையாக அரசுப் பாடத் திட்டத்தை எல்லோருக்கும் கற்பிப்பது. இது மெட்ரிக், மத்திய நிலை பள்ளி மாணவர்களை அரசு பாட தரத்திற்கு தரம் இறக்குவது போன்றது.இதனால் இப்போது இருக்கிற தொடராமல் போவோர்களின் (drop out) சதவீதம் அதிகரிக்காமல் இருக்கும். ஆனால் உலகத் தரத்தோடு ஒப்பிடும் போது நம் மாணவர்கள் பின் தங்கிப் போவார்கள்.

எனவே என்னைக் கேட்டால், சமச்சீர் கல்வி எந்த நாட்டில் அடிப்படை வசதிகளில் எந்த வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லையோ, அந்த நாட்டிக்கு மட்டுமே பயன் தரும். ஏற்கனவே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வியையும் கொண்டு வந்தால் அதுக்கொரு இட ஒதுக்கீடு வர வேண்டி இருக்கும்.

இந்த அரசு சமச்சீர் பாடத்தை நிறுத்தி இருப்பதன் மூலம் அச்சிடப் பட்ட ரூ 200 கோடி மதிப்பு புத்தகம் வீணாகப் போகிறது.அதற்கு அரசு சொல்லும் காரணம், சமச்சீர் பாடத்திட்டம் சரியான தரத்துடன் இல்லை என்பது.200 கோடியை வீண் செய்வதா? அரைகுறை பாடத்திட்டமா? என்று கேட்டால், 200 கோடியை வீணாகப் போனாலும் பரவயில்லை, தரமற்ற கல்வி தரப்படக் கூடாது என்று தான் சொல்வேன் நான்.

நம் நாட்டில் எதிலும் சமச்சீர் கொள்கை இல்லை. அரசும், தனியாரும் கலந்து தான் எல்லா துறைகளிலும் ( பாதுகாப்பு மற்றும் சிலவற்றை தவிர) இருக்கின்றன. எனவே இப்போது இருக்கும் நிலையே கல்வியிலும் தொடரலாம். நன்றாகப் படிப்பவர்கள் மெட்ரிக், மத்திய பாடத் திட்டமும், மற்றவர்கள் அரசுப் பாடத்திட்டத்திலும் படிப்பதில் தவறொன்றும் தெரியவில்லை.

இன்னும் கேட்டால், அரசுப்பாடத் திட்டத்தின் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, அதாவது எடுத்த உடனேயே எல்லா வகுப்புகளுக்கும் அதிகப்படுத்தாமல், ஆறாம் வகுப்பில் ஆரம்பித்து அடுத்தடுத்து அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு போவும் போது தரமான அதிகரிக்கப்பட்ட கல்வித் தரம் கொடுக்கப் பட வேண்டும். அப்போது தான் இன்னும் 10 வருடங்களுக்குப் பிறகு சமச்சீர் கல்வி என்பது இயல்பாகவே வந்திருக்கும்.

Friday, March 11, 2011

50 First Dates (2004) - திரை விமர்சனம்



ஏறக்குறைய 7 வருடங்களுக்கு முன்பு பார்த்த, பிடித்த ஜில்லுன்னு ஒரு காதல் ஆங்கில திரைப் படம் இது. . "மூன்றாம் பிறை" யான கதை தான். ஆனால் இங்கே நாயகன் தன் காதலியின் குணப்படுத்த முடியாத குறையை தினமும் குணப்படுத்தி(?) வாழ்வான்.தினமும் ஆனந்தத்தோடு போராடி எப்படி வெற்றி பெறுகிறான் என்பதைச் சொல்லும் காவியம்

ஆடம் ஒருநாள் சிற்றுண்டி கடைக்குச் செல்கிறான். அங்கே "விழியில் விழி மோதி இதய கதவொன்று திறந்ததே".... என்று விழி வழியே ஒலி எழுப்பும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான்.அவள் சிறு பிள்ளையாய் பேன்கேக்கை (நம்ம ஓர் ஆப்பம்) அழகாய் வெட்டி வைத்து வீடு கட்டிக் கொண்டிருக்கிறாள். அழகி சிறு பிள்ளையாய் சிறு பிள்ளை தனமான வேலையை முழு ஈடுபாட்டுடன் செய்வது அழகு. அதை பார்த்து ரசிப்பது அதை விட அழகு. ஆடம் அப்படியே அமைதி இழக்கிறான். அந்த வீட்டிற்கு ஒரு கதவு வைக்க (ஆப்பத்தாலேயே) முயன்று கொண்டிருக்கிறாள்.அப்போது நாயகன் ஒரு பல் குத்தும் குச்சியை எடுத்துக் கதவைக் குத்தி அவளின் பார்வையில் கலக்கிறான். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர்க்கு ஈர்ப்பு. இருவருக்கும் வேதியியல் வேலை செய்வதை அழகாய் காட்டியியிருப்பது அருமை. என் அப்பாவிற்கு பிறந்த நாள் இன்று.நான் போக வேண்டும். நாளை காலையும் சாப்பிட இங்கே வா. நானும் வருகிறேன் - என்று சொல்கிறாள். இருவருமே தனித்தனியாக நின்று நல்ல பொழுதை நினைத்து சின்னதாய் ஆட்டம் போடுகிறார்கள். அருமை.முதல் நாள் சந்திப்பு ஒரு கவிதையாய் முடிகிறது.


அடுத்த நாள் வழக்கம் போல ஆடம் அதி காலையிலேயே அவளுக்காய் காத்திருக்கிறான். அவள் வருகிறாள்.இவனைப் பார்க்காமல் போய் அவள் எப்போதும் அமரும் இடத்தில் அமர்கிறாள். இவன் அவளின் பக்கத்தில் சென்று அமர்கிறான். "யார் நீ? என்ன வேண்டும்?" என்று கேட்கிறாள். "என்ன கலாய்க்கிறியா?" என்று இவன் அவள் கையைப் பிடிக்க அவள் சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிடுகிறாள். அந்த கடையின் முதலாளிப் பெண் ஆடம் அருகில் வந்து தனியாக பேச வேண்டும் என்று சொல்லி அவனை அழைத்து நடந்த விபத்தைச் சொல்கிறாள். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் ட்ரியுவும், அவள் அப்பாவும் அவரின் பிறந்த நாளன்று அன்னாசிப் பழம் வாங்கப் போகும் வழியில் அவர்களின் வாகனம் விபத்துகுள்ளாகி, அவளுக்கு விபத்து நடந்த நாளுக்கு முன்பு வரை தான் ஞாபகம் இருக்கும் என்பதை சொல்கிறாள்.

அதனால் ஒவ்வொரு காலையும் அன்று தன் தந்தைக்கு பிறந்த நாள் என்று நினைத்துக் கொண்டிருப்பாள். அவளின் அப்பாவும், தம்பியும் அவளுக்கு நடந்த விபத்தை பற்றி மறைக்க, தினமும் அக் 14 (பிறந்த நாள்) போல நாள்காடியை சரி செய்து விடுவார்கள். ஒரே தினசரியை தினமும் போடுவார்கள். அன்று நடந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பதிவு செய்து தினமும் போட்டு விடுவார்கள். அவளுக்கு அன்று (என்றும்) அக் 14. தினமும் அவர்கள் வீட்டில் அவளின் அப்பாவிற்கு பிறந்த நாள் கொண்டாடுவாள்.

இதைத் தெரிந்ததும் ஆடம் அதைப் பற்றிக் கவலைப் படாமல் தினமும் வந்து அவளை காதலிக்க வைப்பான். சில நாட்கள் தோல்வி. பல நாட்கள் வெற்றி. அதாவது அந்த பல நாட்கள் அவள் அவனை அன்று புதியாய் காதலிப்பாள். அன்றைக்கு இவன் காதலும் புதுப்பிக்கப்படும். ஒரு நாள் காதல் = சின்ன ஹைக்கூ.

ஆடம் அவள் அப்பாவிடம் சென்று எத்தனை நாளைக்குத் தான் அக் 14 என்று ஏமாற்றப் போகிறீர்கள். அவளிடம் உணமையை சொல்லுங்கள் என்பான். அவளின் அப்பா அப்படியே சொன்னாலும் அவள் அழுது கொண்டு அன்று மட்டுமே ஞாபகம் வைத்து இருப்பாள். அடுத்த நாள் மீண்டும் அக் 14 என தான் நினைப்பாள் என்று சொல்வார். இவன் அவள் வாழ்க்கையில் இருக்கிறான் என்பதே அவளுக்கு அன்று (தினமும்) மட்டும் தான் ஞாபகம் இருக்கும். அருமையான பிரச்சனை. எப்படி தீர்ப்பது? இது தான் பின் பாதிக் கதை.

ஈ.டீ-யில் நடித்த அதே பிஞ்சு கன்றுக் குட்டி, பாலாகி தயிராகி மோராகி ட்ரியு பெரிமோரா வந்தாலும் அதே பால் மணம் மாறா முகம். எனக்குப் பிடித்த ஹாலிவுட்டின் ஜோதிகா ட்ரியு பெரிமோரின் குழந்தை-குமரி முகமும், அவளின் பாவனைகளும், அவளின் பிரகாசங்களும், சிலிர்ப்புகளும் ஆடமின் தினமும் அவளை காதலிக்க வைக்க அவன் போடும் ஐடியாக்களும், அவன் நண்பர்களின் சேட்டையும், அவன் அவளை காதலிக்க வைக்கும் போது அருகில் இருக்கும் ஒரு ஜப்பானிய பெரியவர் அடிக்கும் நக்கல்களும், ஹவாய் தீவின் பசும் நிறமும், சுற்றிக் கிடக்கும் கடலும் நாமும் படம் முடிந்து வெளி வரும் போது ஒரு பரவச காதலைப் பார்த்த மகிழ்வை வர வைக்கும்.

லந்து: "Did we have ?"" என்று அவள் அவனிடம் கேட்பது
ரகளை: அடுத்த நாள் காலை அவனை அவளது அறையில் பார்த்து அவன் யார் எனத் தெரியாமல் அலறுவது.
அடாவடி: ஒரு நாள் காதலுக்கு போடும் திட்டங்கள்
கூத்து: ட்ரியுவின் தம்பி
கும்மாளம்: கடல் சீலிடம் போய் அவர்களின் காதலின் அடுத்த கட்டம் பற்றி கேட்பது.

ரேட்டிங்: கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில்.. இல்லை இல்லை ரசிக்க வேண்டிய கவிதைகளில் ஒன்று.

Wednesday, March 2, 2011

23-ம் எலிகேசி - பாகம் 3



அரசன்: அமைச்சரே! வெளியில் தலை காட்ட முடியவில்லை. மக்கள் காரி துப்புகிறார்கள்!
அமைச்சர்: அரசே! அதற்கு தான் தாங்கள் கிரீடம் போடுகிறீர்களே! பிறகு என்ன கவலை?

============

அரசன்: அமைச்சரே! மக்கள் என்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள்?
அமைச்சர்: காது கொடுத்து கேட்க முடியவில்லை அரசே!
அரசன்: உங்கள் காதை கொடுத்தால் யார் வாங்குவார்கள்? கொஞ்சம் காசு கொடுத்து கேட்டுப் பாருங்கள்!

============

அரசன்: அமைச்சரே! இந்த வருடத்திற்கான பட்ஜெட் போட்டு விட்டீர்களா?
அமைச்சர்: எப்படி பார்த்தாலும், துண்டு பட்ஜெட் தான் வருகிறது அரசே!
அரசன்: ம்ம்ம்...பரவாயில்லை. பட்ஜெட் ஓலையை வேட்டியில் மடித்து "வேட்டி பட்ஜெட்!" என்று புத்திசாலித்தனமாக சொல்லி முடித்து விடுங்கள்!

============

அமைச்சர்: அரசே! இன்று இரவு நகர் வலம் போகலாமா?
அரசர்: வேண்டாம் அமைச்சரே! போன தடவை சென்ற போது, என்னை மக்கள் திருடன் என நினைத்து கட்டி வைத்து அடித்ததை நினைத்தால், ஈரக் குழி நடுங்குகிறது!
அமைச்சர்: இந்த தடவை அப்படி நடக்காது அரசே!
அரசர்: எப்படி சொல்கிறீர்கள்!
அமைச்சர்: இந்த தடவை நான் பணம் கொடுத்து யாரையும் ரெடி பண்ணி வைக்கவில்லை அரசே!

============


அமைச்சர்: அரசே! ஒரு பசு மாடு நம் மனு நீதி மணியை அடிக்கிறது!
அரசர்: ஓ! அப்படியா? கட்டிப்போட்டு ஒரு லிட்டர் பாலை கறந்து விடுங்கள்.

============

அமைச்சர்: அரசே! நம் மாணவர்கள் எவ்வளவு புத்திசாலிகளாக உள்ளார்கள் பார்த்தீர்களா?
அரசர்: ஓ! அப்படியா?
அமைச்சர்: "களிமண் எங்கே உள்ளது?" என்று கேட்டால், நம் அரசரின் தலையில் என்று பதில் சொல்கிறார்கள்.

============

அமைச்சர்: அரசே! எல்லா மக்களும் திருவிழாக்கு சென்று விட்டர்கள்! நாடே வெறிச்சோடிக் கிடக்கிறது!
அரசர்: "வாருங்கள், போய் கொள்ளை அடிக்கலாம்" என்கிறாயா?

============

அமைச்சர்: அரசே! நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது!
அரசர்: எனக்கும் டிக்கெட் புக் பண்ணி விடு. நானும் அதன் ஆட்டத்தைப் பார்க்க வேண்டும்!

============

அரசர்: என்ன அமைச்சரே? நாடு முழுக்க ஒரே பரபரப்பு! ஒரே வெடி சத்தம்! என் பிறந்த நாள் கூட இன்றில்லையே!
அமைச்சர்: யாரோ நீங்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பி விட்டான், அரசே!

============

அரசர்: அமைச்சரே! நாட்டின் நலம் கருதி, நான் தினமும் 16 மணி நேரம் வேலை செய்யப் போகிறேன்!
அமைச்சர்: பிறந்த வீட்டிற்கு சென்றிருந்த அரசியார் திரும்பி வந்து விட்டாரா அரசே?

============

அமைச்சர்: அரசே! வாயிக்குள் விரலை விட்டு இப்படி விசில் அடிக்காதீர்கள்?
அரசர்: ஏன்? சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறதா?
அமைச்சர்: இல்லை ! என் மேல் உங்கள் எச்சில் படுகிறது!

============

புலவர்: அரசே! என் பாடலுக்காக பரிசு கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?
அரசர்: கொடுத்த பரிசுகளை திருப்பி வாங்கத் தான்!

============

தளபதி: போர் முரசு ஒலித்து விட்டது. எங்கே போனீர்கள்?
அரசர்: எங்கும் போகவில்லை! நான் இங்கே ஒளிந்திருக்கிறேன்.

============

தளபதி: அரசே! போர் முரசைக் காணவில்லை! இப்போது என்ன செய்வது?
அரசர்: நீங்கள் போருக்குப் போங்கள். நான் தேடிக் கண்டு பிடித்து எடுத்து வைத்திருக்கிறேன்!

Friday, February 25, 2011

நடுநிசி நாய்கள் - விமர்சனம்



வாவ். இப்படி ஒரு படம் கௌதம் மேனனிடமிருந்து வரும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. "இது நான் செய்யும் புது முயற்சி" என்று சொன்னார். நான் வித்தியாசமாய் புதுமையாய் ஒரு திகில் படம் எடுத்து இருக்கிறார் என்று நினைத்து பார்த்தால்.. வாரணம் ஆயிரத்தை வேட்டையாடி விளையாடியவர் இப்படி நடு நிசி நாய்களை பிடிப்பார் என்று எதிர் பார்க்கவே இல்லை.

தமிழகத்தில் சினிமாவின் வலிமை எவ்வளவு என்று தெரிந்திருந்தும் (வந்த அத்தனை முதல்வர்களும் சினிமாவின் தொழிலாளிகளே) சிலவற்றை சினிமாவில் சொல்லக் கூடாது என்ற எழுதப் படாத விதியை ஒவ்வொரு படைப்பாளியும் மனதில் கொள்ள வேண்டும்.

எவற்றை சினிமா என்ற ஊடகத்தின் மூலம் சொல்லக் கூடாதோ அவற்றை சொல்லியிருக்கிறார் கௌதம். கீழ்தரமான கருவை புது முயற்சி என்ற பெயரில் கதையாக்கி இருக்கிறார். பாட்டில்லாமல், இசையில்லாமல் ஒரு தில்லாய் படம் எடுத்ததற்கு மட்டும் தான் அவரைப் பாராட்ட வேண்டும்.
சமுதாய நிகழ்வுகளைத் தான் படம் எடுத்து ருக்கிறார் என்று சொன்னால்....அதற்கு என் கேள்வி....எல்லோர் வீட்டிலும் நடக்கும் சாதாரண விசயம் தான் கலவி. இருந்தும் ஏன் 4 பக்கமும் மூடிய அறையில் செய்கிறார்கள்? முச்சந்தியில் தெருவிளக்கின் கீழ் படுக்கை போட்டு ஊரறிய செய்கிறார்களா? இல்லையே... எல்லா ஆண்களும் பெண்களும் உடையை வைத்து மறைத்து இருப்பது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும் நாம் ஏன் உடை போட்டுக் கொண்டு அலைகிறோம்?

எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்துத் தான் ஆக வேண்டும். அது சினிமாவாக இருக்கட்டும்.. உடம்பாக இருக்கட்டும்...கலாச்சாரமாக இருக்கட்டும்...

நடுநிசி நோய்கள் சிலருக்கு இருப்பதால் தான் அவர்கள் நடுநிசி நாய்கள்.   இந்தப் படத்தில் அவன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்று எதையும் சொல்லவில்லை. உண்மையில் சமுதாயத்தின் பால் அக்கறை இருந்தால் ஒரு தீர்வை சொல்ல வேண்டியது தானே... தினத் தந்தி செய்தியை இவர் விசுவலாக காண்பித்து இருக்கிறார்.

இது மாதியான படங்கள் வேண்டாம் என்பது தான் என் விவாதம். நல்ல நாவல்களுக்கும், டீ கடையில் மறைத்து தொங்கவிடப் பட்டிருக்கும் புத்தகத்திற்கும் வேறுபாடு உண்டா இல்லையா? "அடுத்த வீடு மாமி" புத்தகத்திற்கும் "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகத்திற்கும் வேறுபாடு உண்டு என்பது என் விவாதம்.

இரண்டுமே இலக்கியம் தான் என்று நீங்கள் சொன்னால்...நான் என்ன செய்வது? எவ்வளவோ கருப்பொருள் இருக்க.. இதைப் போய் ஏன் எடுக்க வேண்டும்? படைப்பாளிகளை தள்ள வேண்டாம். அவர்களின் தரம் குறைந்த படைப்புகளை ஒதுக்கி தள்ள வேண்டும். அப்போது தான் அவர் நல்ல படைப்புகளைத் தர முடியும். அவரின் இந்த முயற்சியை நாம் நிராகரிக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் இப்படி பட்ட படங்களை எடுக்கிறார்களே என்று என்றால்....அவன் செய்த தவற்றை நாமும் செய்தால் அது சரி என்று ஆகி விடுமா? எதை பற்றி வேண்டுமானாலும் எவரும் எப்படியும் எடுக்கலாம். அவர்கள் பணம். அவர்கள் உழப்பு. ஆனால் சினிமா என்று வரும் போது அந்த ஊடகத்திற்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. ஆகவே இது போன்ற ஒரு படம் இப்படி "செம்மொழி" இயக்குனரிடமிருந்து வருவது தேவை தானா  என்பது தான் என் கேள்வி. காமத்துப் பால் திருக்குறலிலும் உண்டு. நான் காமம் என்ற உணர்வை எதிர்க்கவில்லை. அது எவருடன் என்பதை காட்டிய விதத்தை தான் குறை சொல்கிறேன்.

ஷகிலாவை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களிடம் நான் எதுவும் கோவித்துக் கொள்ளமாட்டான். ஆனால் கௌதம் போன்றவர்களிடமிருந்து இப்படி வரும் போது அது எதிர்க்கப் பட வேண்டும்.  ரஜினியே என்றாலும் குப்பை படம் கொடுத்தால் ஒதுக்கி தள்ளிவோம். தள்ளி இருக்கிறோம். இன்னும் தள்ளுவோம்.அதே நேரத்தில் நல்ல படைப்புகளை கை தட்டி உற்சாகப்  படுத்துவோம்.


நான் கேட்பதை வள்ளுவர் பாணியில் கேட்கவேண்டும் என்று சொன்னால்...

இனிய உளவாக இன்னாது படமெடுத்தல்
கனியிருப்ப
க் காய் கவர்ந்தற்று.

இது அடல்ட் மூவி என்றாலும் அசிங்க மூவி! என்று கூவி நடுநிசி நாய்களுக்கு நடுநிசி நோய்கள் இருப்பதாய் என் விமர்சனத்தை முடிக்கிறேன்.

Tuesday, December 14, 2010

லென்ஸின் ரத்த சரித்திரம்




கரு: பழிக்குப் பழி.

தத்துவம்: ஹிட்லரிசம்.

ஒரு வரி கதை: விரலுக்கு கை. கண்ணுக்குக் தலை. உயிருக்கு குடும்பம். குடும்பத்துக்கு கிராமம் - பலி!

களம்: துப்பாக்கி,அரிவாள்களும் அவை தாங்கிய மனிதர்களும்.

கால நேரம்: வாழும் வாழ்வைப் போலவே இருட்டும், மங்களும்

கதை: அப்பா, அண்ணனைக் கொல்லும் அடுத்த வகுப்பினரை கொன்று குவிக்கிறான் ரவி. அப்படி இவனால் குடும்பத்தை இழக்கும் சூரி இவனைப் பழி வாங்கத் துடிக்கும் கதை. முன்னவன் தெலுகு தேசம். பின்னவன் காங்கிரஸ். முன்னவன் விவேக் ஓபராய். பின்னவன் சூர்யா.

கற்பனை: நடந்த உண்மை கதை!

பாத்திரங்கள்: அடங்கி வெடிக்கும் சிங்கமாக விவேக். பாயும் புலியாக சூர்யா. இவர்கள் தவிர அன்னபாடிகள் ஆயிரம் பேர்.

சிறப்பு: பெண்களும் பெரிய முடிவுகளில் (கொலைகளைச் செய்ய / வேண்டாமென) தலையிட்டு மாற்றுவது.

யதார்த்தம்: மகா பாரதம் ரத்த சரித்திரமாய்!

புதிர்: அமைச்சராக இருக்கும் ரவி தனக்கென ஒரு படையை வைத்துக் கொண்டு ஹிட்லர் போல எவன் எவன் எதிரியாக 'தெரிகிறானோ' அவனுக்கெல்லாம் ஒரு தோட்டா.சூரியை மட்டும் படம் ஆரம்பித்த 15 நிமிடத்தில் இருந்து கத்தியை வைத்து கொல்ல முயன்று கொண்டே இருப்பது.
பல தலைகள் ரவிக்கே தெரியாமல் அவனுக்காக விழுவது
'உண்மையில்' சூரியின் மேலும் குற்றங்கள் இருக்கையில், இவனை படத்தில் நல்லவனாக காட்டியிருப்பது.

புரிந்தது: பதவிக்காக மனிதம் பைத்தியமாவது.

நடந்தது: படம் முடிந்தவுடன் நம் காலுக்கும் கீழேயும் ரத்தம் உண்டா என்று உற்றுப் பார்ப்பது.

லாஸ்ட் லைன்:-
வஞ்சிக்கப் பட்டவர்கள் சமயம் பார்த்து காத்திருப்பது. பிறகு நேரம் வரும் போது ஒன்று கூடுவது. பதவிக்காக கொஞ்சம் நல்லது செய்வது. வந்த பதவியை விடக் கூடாது என்று மாறி மாறி தப்பு செய்வது, பழி தீர்ப்பது போன்ற மனித குலத்தின் ஒட்ட்டு மொத்த குணங்களையும் வெளிப்படுத்தி காந்தியம் என்பது ஏட்டில். கலவரயியம் என்பது எப்போதும் நாட்டில் என்று சொல்லும் படம் !

Tuesday, August 17, 2010

எந்திரன் பாடல் - என்னில் தேடல்!!!











இயக்குனர் சங்கர் அவர்கள் என்னை முதன் முறையாய் தொடர்பு கொண்டு எந்திரன் படத்திற்கு பாடல் கேட்ட பொழுது நான் வேறு வேலையில் ஈடுபட்டிருந்ததால் அந்த வாய்ப்பு கவிப் பேரரசு வைரமுத்துவிடம் கொடுக்கப் பட்டது.  ( இது என் கற்பனை!)


குறிப்பு: பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்றால் எல்லா பாடலும் அவர் புகழ் பறை சாற்றும். உதாரணம் எல்லா படங்களும். அது போல ஐஷ்வர்யாவின் படத்தில் அவர் புகழ் பாடும். உதாரணம் ஜீன்ஸ்.
எந்திரன் படத்தில் மட்டும் தான் நாயக இருவரையும் ஒரு பாடலில் வர்ணிக்க வாய்ப்பு. கவிஞர்கள் தாளில் குலை குலையாய் கவிதை காய்ப்பு!!!

இதோ என் பங்கு....

=======================

கோரஸ்:
இவன் உடலைச் செய்ய தேடி எடுத்தோம் புத்தம் புது உலோகம்!
இவன் உருவம் பார்த்ததும் பரவசத் தீயில் பற்றிக் கொள்ளும் இந்த பரந்த உலகம்!
இந்த அகிலம் முழுதும் ஆனந்தம் நிரப்பிய சமயம்
இவன் அமைதியாய் போய் அமருவானே இமயம்!


பெண்:
எந்திரா! என் தீரா!
என் இந்திரா! என் சந்திரா!

அண்டம் முழுக்க விண்மீன் கூட்டம்!

அதில் நீ ஒருவன் தான் சூரியன்!

இந்த கண்டம் முழுக்க கனவுக் கூட்டம்!

அதில் நீ ஒருவன் தான் காரியன்!

குருதி பாயும் இதயம் பார்த்து கறுகாத என் இதயம்

இறுதியில் எந்திர இதயத்திற்கு ஏங்கியதே!

இருபது வருடங்களாய் இறுகிய என் இதயம்

கடைசியில் மந்திர இதயத்திற்கு மயங்கியதே!


ஆண்:

சிலையே! சேர சோழ கலையே!
என்னை கொதிக்க வைத்த உலையே!

உலக அழகியே! இந்த உலோகம் அதிர வைத்த இசைத் தீயே!

ஆண் என்று தெரிந்ததும் ஒரு அணு விடாமல் தின்ற அசைவப் பூவே!

மரணமற்ற உடல் நான்! உனக்காக ஒரு முறை உருகி

மனிதனாக பிறப்பேன் நான்!

எந்திரனாய் இருக்கும் போதே இப்படி என் இதயத்தில் இசை வெள்ளம்!

மந்திரமாய் மானிடனாய் பிறந்திருந்தால் என்னவாகும் என் உள்ளம்?


கோரஸ்:
இவன் கை அசைத்தால் மேகம் மழை உடன் பொழியும்!
இவன் கை கொடுத்தால் காவிரி கங்கையுடன் இணையும்!
இந்தப் பெயருக்கு பின்னால் இருக்குது மக்கள் சக்தி!
இந்தப் பெயரால் பின் நாள் வரும் ஒரு மக்கள் எழுச்சி!


பெண்:
உன் முகம் பார்த்து மடிந்தேனா? உன் அகம் பார்த்து ஒடிந்தேனா?
பதில் தெரியா கேள்விக்கு விடை தெரியாமல் மடிவேனா?


ஆண்:
அடி கொம்புத் தேனே! என் அன்பு மானே!
கணக்கு பார்த்து வருவதா காதல்?
என்னைத் தாண்டி வந்து விடுமா அந்த சாதல்?


கோரஸ்:
இவள் பிறந்ததும் பூமிக்கே வந்து விட்டது அழகு!
நிலவே இனி நீ அழகில்லை. வெட்கப்பட்டு விலகு!
இவள் படம் பதித்தால் தாளும் தங்கம்!
இவள் உடன் வசித்தால் நாளும் சொர்க்கம்!


பெண்:
உன்னோடு நான் எப்போதும் ஒட்டியே இருப்பது சாதகமா?
பெரிய பெயருடன் இருப்பதால் இதற்கு பாதகமா?


ஆண்:
மனதோடு மாட்டி இருப்பது எப்படி அந்நியம்?
தமிழுக்காய் பிறந்தது நான் செய்த புண்ணியம்!

உலகப் பட்டம் மாறும் உன் அழகு என்றும் கூடும்!

முதுமை கூட முட்டிகொண்டி விலகி விலகி ஓடும்!


கோரஸ்:
இவன் உடலைச் செய்ய தேடி எடுத்தோம் புத்தம் புது உலோகம்!
இவன் உருவம் பார்த்ததும் பரவசத் தீயில் பற்றிக் கொள்ளும் இந்த பரந்த உலகம்!
இந்த அகிலம் முழுதும் ஆனந்தம் நிரப்பிய சமயம்

இவன் அமைதியாய் போய் அமருவானே இமயம்!