Friday, May 27, 2011

சமச்சீர் கல்வி வேண்டுமா? வேண்டாமா?


செய்தி:-

பள்ளிக் கல்வியில், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாநிலக் கல்வி திட்டம் (ஸ்டேட் போர்டு), மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வித் திட்டங்கள், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நான்கு வகையான கல்வித் திட்டங்கள், மாணவர்களை அடிப்படையிலேயே பிரிப்பதுடன், எதிர்காலத்தில் சமூக, பொருளாதார ரீதியாகவும் அவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்க வழி வகுக்கிறது என்ற குற்றச்சாட்டை, கல்வியாளர்கள் நீண்ட காலமாகக் கூறி வந்தனர்.இதை மாற்றுவதற்கு, ஒரே வகையான, தரமான கல்வித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் பரவலாக குரல் எழுப்பப்பட்டது. இதையடுத்து, 2006 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது.வகுப்பு வாரியாக, நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து, பெரும் செலவில் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக நடப்பு கல்வியாண்டில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு, சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மீதமுள்ள வகுப்புகளுக்கு, வரும் ஜூன் மாதம் அமல்படுத்தப்பட இருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.பதவியேற்ற ஏழாவது நாளில், திடீரென சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்து, ஜெயலலிதா அறிவித்தார். தயாரிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடத் திட்டங்கள் தரமானதாக இல்லை என்றும், பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, தரமான பாடத் திட்டங்களை உருவாக்க குழு அமைத்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதனால், வரும் கல்வியாண்டில் பழைய பாடத் திட்டங்களே மீண்டும் அமலுக்கு வருகின்றன.

சமச்சீர் கல்வி பற்றி என் கருத்து.

சமச்சீர் கல்வி முறை என்பது "எல்லோருக்கும் எல்லாமும் ஒன்று" என்ற சமத்துவ எண்ணத்தின் வெளிப்பாடு.12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் எந்தப் பள்ளியிலிருந்து வந்தாலும் அவனுக்கு ஒரே மாதிரியான படிப்பு சொல்லித்தரப் பட்டிருக்க வேண்டும். கல்வியில் வேறுபாடு கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தின் வெளிப்பாடு.

சரி இதை சற்று அலசிப் பார்ப்போமானால், கல்விக்கு மட்டுமில்லை. அடிப்படை வசதிகள், மருத்துவம் எல்லாவற்றிலும் சமச்சீர் வேண்டும்.உதாரணமாக மருத்துவத்தில் சமச்சீர் என்று வைத்துக் கொண்டால், இரண்டு நிலைகள் (standard) உள்ளன. 1. அரசு மருத்துவனைகளை தனியார் மருத்துவமனைகளின் தரத்தோடு மாற்றுவது அதாவது ஏற்றுவது. 2. தனியார் மருத்துவமனைகளை அரசு மருத்துவமனைகளின் தகுதிபோடு இருக்கும்படி மாற்றுவது அதாவது குறைப்பது.

முதல் சூழ்நிலை நடைமுறைக்கு வந்தால், அனைத்து (அரசு உள்பட) மருத்துவனைகளும் அப்பலோ மருத்துவமனை போல இருக்கும். இப்படி இருந்தால் நினைத்துப் பாருங்கள். நாடே இருமாது. இரும்பு போல இருக்கும்.ஆரோக்கிய நாடு வளமான நாடு. ஆனால் இது நடைமுறை சாத்தியா? வளமான நாடுகளுக்கு மட்டுமே இது சாத்தியம்.

இரண்டாவது சூழ்நிலை நடைமுறைக்கு வந்தால், அப்பலோ முதல் அனைத்து மருத்துவமனைகளும் சமச்சீராக அரசு மருத்துவமனைகளின் தரத்திற்கு வந்தால், நமக்கே தெரியும். இது தரம் குறைகிறது என்று. பிறகு அதன் பாதிப்பைச் சொல்லவா வேண்டும்? இருமி இருமி இந்தியாவையே குலுக்க வேண்டி வரும்.

சரி.... இப்போது கல்விக்கு வருவோம். மெட்ரிக் கல்வி திட்டத்தை சமச்சீர் என்று ஆக்கிவிட்டால், கிராமப் புற மாணவர்களின் கதி என்ன? படிக்காத பெற்றோர்களின் பிள்ளைகளின் கதி என்ன? ஆனால் அனைத்து மாணவர்களும் உயர்ந்த தரக் கல்வியைப் படிக்க ஆரம்பிப்பார்கள். ஆனால் இது பள்ளியை விட்டு விலகும் மாணவர்களின் (drop out) எண்ணிக்கையை அதிகப் படுத்தி விடும். நன்றாகப் படிப்பவர்கள் இன்னும் நன்றாகப் படிப்பார்கள். சரியாகப் படிக்காதவர்கள் காணாமல் போய் விடுவார்கள். ஆக மெத்தப் படித்த கூட்டம் ஒரு பக்கம், எதற்கும் உதவா உதவாக்கரைகள் ஒருபக்கம் என இரு சமுதாயம் வரும்.(இப்போது, அரசு பாடத்திட்டம் படிப்பவர்களுக்கே.. கிராமப் புர மாணவர்களுக்கு என தனியான இட ஒதுக்கிடு உள்ளது என்பது கவனிக்கத் தக்கது)

இரண்டாவது சூழ்நிலையாக அரசுப் பாடத் திட்டத்தை எல்லோருக்கும் கற்பிப்பது. இது மெட்ரிக், மத்திய நிலை பள்ளி மாணவர்களை அரசு பாட தரத்திற்கு தரம் இறக்குவது போன்றது.இதனால் இப்போது இருக்கிற தொடராமல் போவோர்களின் (drop out) சதவீதம் அதிகரிக்காமல் இருக்கும். ஆனால் உலகத் தரத்தோடு ஒப்பிடும் போது நம் மாணவர்கள் பின் தங்கிப் போவார்கள்.

எனவே என்னைக் கேட்டால், சமச்சீர் கல்வி எந்த நாட்டில் அடிப்படை வசதிகளில் எந்த வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லையோ, அந்த நாட்டிக்கு மட்டுமே பயன் தரும். ஏற்கனவே சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு சமச்சீர் கல்வியையும் கொண்டு வந்தால் அதுக்கொரு இட ஒதுக்கீடு வர வேண்டி இருக்கும்.

இந்த அரசு சமச்சீர் பாடத்தை நிறுத்தி இருப்பதன் மூலம் அச்சிடப் பட்ட ரூ 200 கோடி மதிப்பு புத்தகம் வீணாகப் போகிறது.அதற்கு அரசு சொல்லும் காரணம், சமச்சீர் பாடத்திட்டம் சரியான தரத்துடன் இல்லை என்பது.200 கோடியை வீண் செய்வதா? அரைகுறை பாடத்திட்டமா? என்று கேட்டால், 200 கோடியை வீணாகப் போனாலும் பரவயில்லை, தரமற்ற கல்வி தரப்படக் கூடாது என்று தான் சொல்வேன் நான்.

நம் நாட்டில் எதிலும் சமச்சீர் கொள்கை இல்லை. அரசும், தனியாரும் கலந்து தான் எல்லா துறைகளிலும் ( பாதுகாப்பு மற்றும் சிலவற்றை தவிர) இருக்கின்றன. எனவே இப்போது இருக்கும் நிலையே கல்வியிலும் தொடரலாம். நன்றாகப் படிப்பவர்கள் மெட்ரிக், மத்திய பாடத் திட்டமும், மற்றவர்கள் அரசுப் பாடத்திட்டத்திலும் படிப்பதில் தவறொன்றும் தெரியவில்லை.

இன்னும் கேட்டால், அரசுப்பாடத் திட்டத்தின் தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, அதாவது எடுத்த உடனேயே எல்லா வகுப்புகளுக்கும் அதிகப்படுத்தாமல், ஆறாம் வகுப்பில் ஆரம்பித்து அடுத்தடுத்து அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு போவும் போது தரமான அதிகரிக்கப்பட்ட கல்வித் தரம் கொடுக்கப் பட வேண்டும். அப்போது தான் இன்னும் 10 வருடங்களுக்குப் பிறகு சமச்சீர் கல்வி என்பது இயல்பாகவே வந்திருக்கும்.

No comments:

Post a Comment