Thursday, April 22, 2010

குடியரசு இந்தியா !!!














 
ஊழல் இல்லாத ஊராட்சி இல்லை!
வன்முறை இல்லாத வட்டம் இல்லை!
மதக் கலவரம் இல்லாத மாவட்டம் இல்லை!
ஆக, மானுடம் வாழும் நிலையில் எந்த மாநிலமும் இல்லை!

ஆனால் யோசித்துப் பார்த்தால், ஆச்சரியமாய் இருக்கிறது!!
சச்சரவுகளை சமாளித்து, கூடி மகிழும் கூட்டுக் குடும்பம் போல
இவ்வளவு பிரச்சனை கொண்டும் ஒரே கூடாய் இந்தியா!

வெறும் ஒரு பனிப் பாறையை வைத்து,
ஒரு மாகப்பலின் வாழ்க்கையை முடித்தது ஒரு சமுத்திரம்!
ஆனால்,
இத்தனை பேரை தாங்கிக் கொண்டு, இத்தனை போரை வாங்கிக் கொண்டு
தரை தட்டினாலும், தவழும் எங்கள் இந்தியா - ஒரு சரித்திரம்!
மூச்சு வாங்கினாலும் முட்டி முன்னேறுகிறதே...
அது மூக்கில் விரல் வைக்கும் விசித்திரம்!

குட்டி நாடுகள் குருவியாய் மாறி
உயரேப் பறப்பதில் வியப்பில்லை!

அரசர்களால் ஆண்டுக்கணக்காய் ஆளப்பட்டு
அதனால் அந்நியர்களால் வாங்கப்பட்டு
அதனால் அடிமைகளாய் வாக்கப்பட்டு
அதனால் அறியாமையால் மூழ்கப்பட்டு
அதனால் சாதி, சமய, மொழிகளால் பிரிக்கப்பட்டு
இத்தனை பட்டும், இன்னும் படாமல்
விரல் நுனியில் வாக்காய் விதைக்கப்பட்டு
துளிர்க்கும் எங்கள் இந்தியா - வியப்பின் வியப்பு!

குடியரசில் கூட்டம் அதிகம் என்பதால் குளறுபடிகள் அதிகம் தான்!
தந்திரங்களால் இந்த எந்திரத்தில் கோளாறுகள் அதிகம் தான்!
இவை தவிர்க்க முடியாதவை, சில தன்னலவாதிகள் திருந்தும் வரை!
வாகனம் முன்னே செல்லும் போது - இவர்கள்
புகையோடு சேர்ந்து பின்னே போகிறவர்கள்!!

இவர்களைத் தவிர்த்து, மீதமிருப்பது நூறு கோடி!
குடியரசு வாழ்ந்து கொண்டிருப்பது இவர்களின் தெருக் கோடி!

இந்தக் குடியரசு மட்டும் தான்
நூறு கோடி மூக்கால் சுவாசிக்கிறது!
இருநூறு கோடி காலால் ஓடுகிறது!

இந்த மக்கள் சக்தியால் ஒருநாள்
பொருளாதாரம் பிரகாசமாய் எரியும்!
வறுமையின் முதுகெலும்பு முறியும்!
இதை இந்த உலகம் ஒருநாள் அறியும்!

பற்றிக் கொண்டது நம்பிக்கைத் தீயில் இந்தியா!
வெற்றி கொள்வோம் என நம்பி நம் கையில் இந்தியா!!
வந்தே மாதரம்!!!

1 comment:

simariba said...

உங்கள் கவிதையும் அதற்கான படமும் மிகவும் அருமை. மன்றம் வழியாக இங்கு வந்த எனக்கு ஒரே ஆச்சர்யம். இன்னும் எழுதுங்கள்.

Post a Comment