வாவ். இப்படி ஒரு படம் கௌதம் மேனனிடமிருந்து வரும் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. "இது நான் செய்யும் புது முயற்சி" என்று சொன்னார். நான் வித்தியாசமாய் புதுமையாய் ஒரு திகில் படம் எடுத்து இருக்கிறார் என்று நினைத்து பார்த்தால்.. வாரணம் ஆயிரத்தை வேட்டையாடி விளையாடியவர் இப்படி நடு நிசி நாய்களை பிடிப்பார் என்று எதிர் பார்க்கவே இல்லை.
தமிழகத்தில் சினிமாவின் வலிமை எவ்வளவு என்று தெரிந்திருந்தும் (வந்த அத்தனை முதல்வர்களும் சினிமாவின் தொழிலாளிகளே) சிலவற்றை சினிமாவில் சொல்லக் கூடாது என்ற எழுதப் படாத விதியை ஒவ்வொரு படைப்பாளியும் மனதில் கொள்ள வேண்டும்.
எவற்றை சினிமா என்ற ஊடகத்தின் மூலம் சொல்லக் கூடாதோ அவற்றை சொல்லியிருக்கிறார் கௌதம். கீழ்தரமான கருவை புது முயற்சி என்ற பெயரில் கதையாக்கி இருக்கிறார். பாட்டில்லாமல், இசையில்லாமல் ஒரு தில்லாய் படம் எடுத்ததற்கு மட்டும் தான் அவரைப் பாராட்ட வேண்டும்.
சமுதாய நிகழ்வுகளைத் தான் படம் எடுத்து ருக்கிறார் என்று சொன்னால்....அதற்கு என் கேள்வி....எல்லோர் வீட்டிலும் நடக்கும் சாதாரண விசயம் தான் கலவி. இருந்தும் ஏன் 4 பக்கமும் மூடிய அறையில் செய்கிறார்கள்? முச்சந்தியில் தெருவிளக்கின் கீழ் படுக்கை போட்டு ஊரறிய செய்கிறார்களா? இல்லையே... எல்லா ஆண்களும் பெண்களும் உடையை வைத்து மறைத்து இருப்பது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும் நாம் ஏன் உடை போட்டுக் கொண்டு அலைகிறோம்?
எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்துத் தான் ஆக வேண்டும். அது சினிமாவாக இருக்கட்டும்.. உடம்பாக இருக்கட்டும்...கலாச்சாரமாக இருக்கட்டும்...
நடுநிசி நோய்கள் சிலருக்கு இருப்பதால் தான் அவர்கள் நடுநிசி நாய்கள். இந்தப் படத்தில் அவன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்று எதையும் சொல்லவில்லை. உண்மையில் சமுதாயத்தின் பால் அக்கறை இருந்தால் ஒரு தீர்வை சொல்ல வேண்டியது தானே... தினத் தந்தி செய்தியை இவர் விசுவலாக காண்பித்து இருக்கிறார்.
இது மாதியான படங்கள் வேண்டாம் என்பது தான் என் விவாதம். நல்ல நாவல்களுக்கும், டீ கடையில் மறைத்து தொங்கவிடப் பட்டிருக்கும் புத்தகத்திற்கும் வேறுபாடு உண்டா இல்லையா? "அடுத்த வீடு மாமி" புத்தகத்திற்கும் "அர்த்தமுள்ள இந்து மதம்" புத்தகத்திற்கும் வேறுபாடு உண்டு என்பது என் விவாதம்.
இரண்டுமே இலக்கியம் தான் என்று நீங்கள் சொன்னால்...நான் என்ன செய்வது? எவ்வளவோ கருப்பொருள் இருக்க.. இதைப் போய் ஏன் எடுக்க வேண்டும்? படைப்பாளிகளை தள்ள வேண்டாம். அவர்களின் தரம் குறைந்த படைப்புகளை ஒதுக்கி தள்ள வேண்டும். அப்போது தான் அவர் நல்ல படைப்புகளைத் தர முடியும். அவரின் இந்த முயற்சியை நாம் நிராகரிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் இப்படி பட்ட படங்களை எடுக்கிறார்களே என்று என்றால்....அவன் செய்த தவற்றை நாமும் செய்தால் அது சரி என்று ஆகி விடுமா? எதை பற்றி வேண்டுமானாலும் எவரும் எப்படியும் எடுக்கலாம். அவர்கள் பணம். அவர்கள் உழப்பு. ஆனால் சினிமா என்று வரும் போது அந்த ஊடகத்திற்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. ஆகவே இது போன்ற ஒரு படம் இப்படி "செம்மொழி" இயக்குனரிடமிருந்து வருவது தேவை தானா என்பது தான் என் கேள்வி. காமத்துப் பால் திருக்குறலிலும் உண்டு. நான் காமம் என்ற உணர்வை எதிர்க்கவில்லை. அது எவருடன் என்பதை காட்டிய விதத்தை தான் குறை சொல்கிறேன்.
ஷகிலாவை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களிடம் நான் எதுவும் கோவித்துக் கொள்ளமாட்டான். ஆனால் கௌதம் போன்றவர்களிடமிருந்து இப்படி வரும் போது அது எதிர்க்கப் பட வேண்டும். ரஜினியே என்றாலும் குப்பை படம் கொடுத்தால் ஒதுக்கி தள்ளிவோம். தள்ளி இருக்கிறோம். இன்னும் தள்ளுவோம்.அதே நேரத்தில் நல்ல படைப்புகளை கை தட்டி உற்சாகப் படுத்துவோம்.
நான் கேட்பதை வள்ளுவர் பாணியில் கேட்கவேண்டும் என்று சொன்னால்...
இனிய உளவாக இன்னாது படமெடுத்தல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
இது அடல்ட் மூவி என்றாலும் அசிங்க மூவி! என்று கூவி நடுநிசி நாய்களுக்கு நடுநிசி நோய்கள் இருப்பதாய் என் விமர்சனத்தை முடிக்கிறேன்.


2 comments:
waste
தமிழ் உறவுகளை கொச்சைப்படுத்தும் இது போண்ற திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவையே......
Post a Comment